முற்றுப் பெறாதவையாய்.. புரட்சி
01.
முற்றுப் பெறாதவையாய்
--------------------------------
எழுந்து நடக்கும் என்னிருப்பைத்
தக்க வைத்தது என் மொழி என்பாய்
அந்த மொழியின் கழுத்தைத் திருகி
மூச்சுக்குழல் வாய் இறங்கி
அகத்தைப் புறத்தே
உருக்கி வார்ப்பதற்காய்
எழுதுவேன் ஒரு கவிதை
தொன்மங்களின் சுகானுபவம்
வாதைகளாய் மாற்றம் பெறும்
நவீனத்துவ முகம்
உன்னுடையதென்பாய்
மரபுகள் வழியாக
உன் முன்னோர்
வஞ்சிக்கப்பட்டதாய்
சரிதங்கள் விரிக்கின்றாய்
பழமையைக் கொழுத்தும்
நெருப்பின் நதிமூலத்தைத்
தேடியலைவதாக
சீற்றம் கொள்கிறாய்
பாறையின் ஆழத்திலிருந்து
மயிர்துளைக்குழாய்
வழியே எழுகின்றது
ஒரு துளி நீர்
வெப்பக் காட்டின் உக்கிரம்
அதைத் துடைத்தழிக்கின்றது
அழித்தலிலும் முற்றுப் பெறாதவையாய்
அவை இயக்கமாய் இயங்குதலாய்
இன்னோர் வடிவம் நோக்கி
எனவேதான் இரத்தம் சிந்தாத
போர்களங்களை நோக்கி
என் மனம் அவாவுகின்றது
ஆனாலும் மனிதர்கள்
இரத்தம் சிந்தும்
போர்களங்களையே விரும்புகிறார்கள்
02.
புரட்சி
-----------
மக்களுக்கு வேண்டியதை
நான் தீர்மானிக்க வேண்டும்
பகடைகளை உருட்டுகின்றேன்
உன்னுடைய தகமையையும்
நானே தீர்மானிப்பதாக உள்ளேன்
துரும்புச் சீட்டால் வெட்டுகின்றேன்
மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள்
கிளித்தட்டு மறிக்கின்றேன்
நான் எதைக் கொள்ள விரும்புவேனோ
அதையே அவர்களும் விரும்புவார்கள்
காயா பழமா
அதற்காக அவர்கள் எத்தகைய
அர்ப்பணிப்புக்களையும் தியாகத்தையும் புரிவார்கள்
மற்றவர்கள் எல்லோரையும்
எம் எதிரிகளாய் பிரகடனப்படுத்துவோம்
நான் தத்துவவாதி
எனவேதான் புரட்சியை வழி நடத்துகின்றேன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-04-13