முகமூடி.. அன்னை இட்ட தீ.. அவளுக்கென்று ஓர் மனம்
01.
முகமூடி
--------------
சாமியென்பார், பூதமென்பார்
வாய்வழியே லிங்கமெடுப்பார்
காவியணிவார், விபூதியணிவார்
அடியேன் எனதுள்ளம்
மாசற்ற வெள்ளையென்பார்
கணக்கில் வராத கறுப்புப் பணத்தை
பீரோவில் பூட்டி வைத்துக்கொண்டு
அவனியிலே
பெண்களைத் தெய்வமென்பார்
தேடிப் போய் அருள் வேண்டி
காலில் விழும் மங்கையருடன்
மணக்கோலத்தில் காட்சியளிப்பார்
மறுநாள் செய்தித்தாள்களிலே
புலால் உண்பது மகாபாவமென்பார்
ஜீவன்களனைத்திலும் ஒளிரும்
தெய்வச்சுடரை வணங்குவதே
ஜீவகாருண்யமென்பார்
தன் ஆயுள் அதிகரிப்பதற்காக
செய்யப்படும் மகாயாகங்களில்
ஆடுகளைப் பலிகொடுப்பார்
நீ குடியிருக்கும் வீட்டின் அடியில்
தங்கப் புதையலிருக்கு
அதைக் காவலிருக்கும் மோகினியைச்
சாந்தப்படுத்த உரிய பரிகாரமிருக்கு என்பார்
சில மாதங்களில்
கிடைக்கப்போகும் புதையல் கனவில்
வீடு,நகை சொத்தனைத்தையும்
கபடவேடதாரியிடம் இழந்துவிட்டு
அடுத்த வேளை உணவிற்கு
வாசலில் கையேந்தி நிற்பவரை
ஆத்திரங்கொண்டு கையாட்களை ஏவி
துரத்தியடிப்பார்
அப்பன் சொல்பேச்சு கேட்டு
அடங்கி நடக்காத பாலகனை
அழைத்து வந்தால்
அவனுள்ளே இருந்து ஆட்டுவிப்பது பேயென்பார்
வேப்பிலையால் ஓட்டுகிறேன் அப்பேயையென்று
அச்சத்தை அவன் இளரத்தத்தில் செலுத்திடுவார்
கரியமிலவாயு கலந்து
காற்று மாசடைந்து வருவதால்
பூமி வெப்பமாகி
வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு
மழை பொய்த்துப்போனதை உணராமல்
ஊரைக் காவலிருக்கும்
‘ஆத்தா’ வின் கோவம் எனக் கருதி
கழுதைக்கு கல்யாணம் செய்து வைக்கும்
ஜனக்கூட்டம் இருக்கும் வரை
முகமூடி அணிந்துள்ள போலிகள்
முற்றும் துறந்த முனிவராக மகுடமணிந்து
மண்ணில் மன்னர்கள் போல்
வலம் வருவர்.
02.
அன்னை இட்ட தீ
----------------------
மதத்தின் பெயரால் நடந்த சமர்களில்
மண்ணில் உதிரம் சிந்தி
மாண்டவர்கள் எத்தனை கோடி
கிணற்றுத் தவளையாய்
தாங்கள் சார்ந்துள்ள மதமெனும் கேணியே
சமுத்திரத்தைவிடப் பெரியது - எனச் சவடால்பேசி
உண்மைக் கடலைக் காணாது
காணாமல் போனவர்கள்
எத்தனை கோடி
சத்தியத்தின் பொருட்டு
பல இன்னல்களை அனுபவித்து
உத்தமராய் ஒருவர் வாழ்ந்தாரென்று
அவரைப் புகழ்ந்து
அன்றாடம் பாக்கள் பாடிக்கொண்டிருப்பதை விட
அந்த நேரத்தில்
அவ்வாய்மையின் வழியே
நம் வாழ்க்கைப் பாதையை
அமைத்துக் கொண்டிருக்கின்றோமா-என
எண்ணுபவர் எத்தனை பேர்
நியாயத்தராசில் நிறுத்தால்
தயை சிறிதுமின்றி
சொர்க்கத்தை அடையும் பொருட்டு
வெளிப்பூச்சாக செய்யப்படும் நற்காரியங்கள்,
பகுத்தறிவால் விழிப்புணர்வை பரப்புவர்
மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கு
மனித நேயத்தோடு செய்யும் காரியம்
சிறிதெனினும்
அதற்கு ஈடாகுமா
இன்னும் உங்களுக்கு
மனிதர்கள்பால் பாகுபாடு தென்படுகிறதா
அப்படியென்றால்
மதமெனும் மூக்குக்கண்ணாடியை
கழட்டிவைத்துவிட்டுப் பாருங்கள்
உண்மையில் ஒரு தெய்வம்
உன்னைப் பற்றிய நினைப்பிலேயே
உறங்காமல் வீட்டில்
தினம் உனது புகைப்படத்தை
உச்சிமுகர்ந்து கொண்டிருக்க
உயிர் தந்து, உண்டி கொடுத்து வளர்த்த
உன் தாயைவிடவா
உயர்ந்த தெய்வம் இத்தரணியிலிருக்கு?
03.
அவளுக்கென்று ஓர் மனம்
---------------------------------
உனது புகைப்படத்தைக் காண்பித்து
பிடித்திருக்கிறதா என்றார்கள்
உனது குடும்பத்தைக் காண்பித்து
ஒத்துவருமா என்றார்கள்
உனது மெலிந்த சரீரத்தைக் காண்பித்து
பரவாயில்லையே என்றார்கள்
உனது அழகை காண்பித்து
கொடுத்து வைத்தவன் என்றார்கள்
உனது பணிவைக் காண்பித்து
புரிஞ்சுநடந்துக்க என்றார்கள்
உனது வீட்டின் சீர்வரிசையை காண்பித்து
போதுமா என்றார்கள்
இவ்வளவு கேள்விகள்
என்னைக் கேட்டார்களே
என்னைப் பிடித்திருக்கிறதா என்று
உன்னை கேட்டார்களா!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-04-13