தானியங்கி குழாய்களும் நானும்.. அமைதியை விளைவித்தல்
01.
தானியங்கி குழாய்களும் நானும்
-----------------------------------------
கை நீட்டினால்
தண்ணீர் கொட்டும்
தானியங்கி நீர்க் குழாய்களும்
தலையைத் தட்டினால்
நீர் தந்து பின் தானே
நிற்கும் குழாய்களும்
ஏனோ பிடிப்பதில்லை
எனக்கு
முதன் முதல்
தானியங்கி குழாயில்
எப்படி கையலம்புவதென்று
குழம்பி அவமானம்
அடைந்ததாலோ
குழாயை நிறுத்தாமல்
வீட்டில் பழக்க தோசத்தில்
இருந்து விடுவாதாலோ
சோம்பலை வளர்ப்பதாலோ
காரணம் எதுவாயினும்
தண்ணீர் தேவையற்று
வீணாகிறதே இந்த தானியங்கி
குழாய்களில் என்பது
மட்டும் காரணமில்லை.
02.
அமைதியை விளைவித்தல்
--------------------------------
என் நுழைவின் பின்
தானே அடைத்துக் கொள்ளும்
தானியங்கிக் கதவுகள்
என்னை பயங்கொள்ளச்
செய்கின்றன.
திறந்து வெளியேறவோ
சிறு ஆசுவாசம் செய்து
கொள்ளவோ தேவைப்படும்
அடையாள இலச்சினை
எந்த நேரமும் தொலைத்துவிடும்
பயத்தோடே இயங்குகிறேன்.
பொருட்களை இடம்மாற்றி
வைக்கிறேன்
புறப்படும் முன்
எடுக்க வேண்டியவற்றை
பட்டியலிட்டு எழுதியும் வைக்கிறேன்
நேர்த்தியாக திட்டமிடுகிறேன்
பின்னும் தீர்வதில்லை சந்தேகங்கள்
எல்லாம் முடிந்த பின்
இங்கிருந்து செல்ல முடியுமா?
செல்லும் முன் எல்லாம்
சரியாக முடிந்துவிடுமா
கதவுகளோ அடையாள இலச்சிகளோ
அதன் நியாயங்களை செய்த
வண்ணமே இருக்கின்றன
என்றாலும் சந்தேகங்கள்
என்னோடே பயணிக்கின்றன
அனிச்சையாய் சுழலும் சுவாசம் போல.
சரி..
தானியங்கிக் கதவுகளோ
இருப்பை பதிவிக்கும்
அடையாள இலச்சினைகளோ
இல்லாத ஓரிடத்தில்
மட்டும் அமைதியின் நெற்பயிர்கள்
தானே விளைந்திடுமா என்ன.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-15