அழகாய் உடைதல்.. ஒரு துளி விழுதே
01.
அழகாய் உடைதல்
----------------------
உடைந்து போகும் நீர்குமிழி ஒன்று
புகைப்படங்களாய்
அலைந்து கொண்டிருக்கிறது
மின்னஞசல் பெட்டிகளில்
சரி!
அழகான ஒன்றை
அழகாய் உடைத்தவன் யார்?
அழகற்ற உடைப்பை
அழகாய் எடுத்தவன் யார்?
குருவிகளுக்கு நீர்வைக்கச் சொல்லி
மின்னஞ்சல் செய்தான் ஒருவன்
வைத்த நீரை எடுப்பதற்கு
எந்த குருவியும் இல்லை
என் ஊரில் என
மறுமொழி அனுப்பினேன்
பதில் இன்று வரை வரவில்லை
மூன்று மாதங்களுக்கு முன்
என் சகோதரிக்கு இரத்தம் கேட்டு
நான் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று
யாரிடமிருந்தோ
இன்று எனக்கே வந்து சேர்ந்தது.
அவள் இறந்துபோன விஷயத்தை
எப்படி யாரிடம் சொல்வது?
குறுஞ்செய்தியில்
நண்பர்கள் தின
வாழ்த்தனுப்பியவனின்
பெயர்
சந்தித்த இடம்
எதுவும் நினைவில்லை
எப்படிக் கேட்பது?
அவனுக்காவது
என் முகம்,
நிகழ்வுகள் நினைவிருக்குமா?
சரி Same to You!
30 பேருக்கு
பார்வார்ட் செய்தால்
அதிர்ஷ்டம் அடிக்குமென்றபடி
வந்துசேர்ந்தார் கடவுள்
புன்னகைத்துவிட்டு கொன்று விட்டேன்
சிரித்த்தபடி செத்துப்போனார்
இல்லாத கடவுள்
02.
ஒரு துளி விழுதே
------------------------
தெருவெங்கும் காலடித் தடங்கள்
கதவை தட்டிவிட்டுப் போயிருக்கிறது
மழை
சொட்ட சொட்ட நனைந்திருக்கிறது
காயப் போட்டிருந்த துணி
நள்ளிரவில்
விழித்திருக்கலாம் நான்
ஓடுகள் கழுவும் மழையை
ஒளிந்திருந்து பார்த்திருக்குமோ
நிலா?
குழந்தையை முத்தமிடும்
தேவதை போல்
சுவர்களில்
முத்தமிட்டுப் போயிருக்கிறது மழை
- லதாமகன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-15