கடல்.. நிலா.. மலை
01.
கடல்
--------
முத்துக்கு விளைநிலமே!
உயிர்சத்துக்கு உறைவிடமே!
முக்கால முணர்ந்தோன்
உனக்களந்தது
முக்கால் எனுமொதுக்கீடு
"உப்பிட்டவரை உள்ளவரை நினை"
இவ்வொப்பில்லா மொழிக்கேற்ப
நினைக்கிறோம்
எம்மை நனைக்கிறோம்
எமக்கப்புறமும் நிலைக்கும் உன்னை.
02.
நிலா
----------
வானவெளி வீதியிலே
பவனி வரும்
வெண்மணியே!
ஊரடங்கும் வேளையிலே
விழித்திருக்கும் உன்
கூர்விழியே!
குறையிலும் அழகாக
நிறையிலும் பொலிவாக
ஒளிவீசும் தண்ணொளியே!
முயற்சிக்கு உந்துதலாய்
தளர்ச்சியை நீக்குவதாய்
அமைவது உன்
தனிச்சிறப்பே!!
03.
மலை
---------
மண்ணின் உயர்வே!
மழைஉன் கொடையே
"நலமா?" எனும்மேகத்தை
நீஅளவளாவும் வேளையிலே
மண்ணைச் சேரும்
பொன்னாம் மழைநீர்
உலகை உய்விக்கும்
பூதங்கள் ஐந்தும்
உன்னில் கொண்டு
மேன்மை கண்டாய்
மாந்தர் எமக்கு
நீயோர் உவமை
உனக்கோர் உவமை
சொல்வாய் மலையே!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-06-01