காதுகளால் நிரம்பி வழிகின்ற சனங்களின் கதைகள்
-------------------------------------------------------
சனங்களின் கதைகள்
காதுகளால் நிரம்பி வழிகின்றன
உள்ளத்தின் பெருத்த பாரங்களாகி
காதுகளை நிரம்பிக் கொண்டு கழுத்தினால் கீழிறங்கி
தோள்மூட்டால் வழிந்து
குதித்தோடுகின்றன சனங்களின் கதைகள்
சனங்களின் கதைகளை ஒரு பாத்திரத்தில்
பிடித்து வைக்கவோ
ஒரு பீப்பாவில் நிரம்பி வைக்கவோ முடியாதுள்ளது.
சீமெண்ட் தரையில் எண்ணெய் வழுக்கலைப்போல்
வழுக்கி ஓடுகின்றன.
வீடு தாண்டி வாசல் தாண்டி
கிராமங்கள் தாண்டி நகரங்கள் தாண்டி
மரங்களின் மீதேறி
வானத்துக் கயிறுகளைப் பிடித்துத் தொங்கி
விண்ணைத் தாண்டிச் செல்கின்றன.
எல்லோரும் இரவில் தூங்கும்போது
வாசலுக்கு வெளியே நின்று
கொட்டக் கொட்ட விழித்துப் பார்க்கின்றன
அப்போது ஒரு பெரும் பூதம்போலவும்
கதைகளில் அறிந்த பேய்கள் போலவும்
உருக்கொள்கின்றன.
இதயத்தை இரத்தத்துடன் கையில் தாங்கியும்
உயிரைத் தனியே எடுத்து
ஒரு இரும்புப் பெட்டியில்
கவனமாக வைத்துக் கொண்டும்
ஏக்கத்துடன் என்னைப் பார்க்கின்றன.
உயிரியல் ஆய்வு கூடத்து
பாடம் போட்ட மனிதர்களின்
உடல்களைப் போலவும்
இறந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளைத் தாங்கிக் கொண்டும்
இன்னும் கொஞ்ச சனங்களின் கதைகள்
மைதானத்தில் நிரம்பி வழிவதாகவும்
சில கிரகவாசிகள் சொல்கிறார்கள்.
இந்தக் கதைகள் எல்லாவற்றையும்;
நான் நேசிக்கும் பூனைக்குட்டியின் வருடலில்
நிதானமாக நின்று கேட்க முடியவில்லை.
அவை அதற்கு முன்னரே வழிந்தோடி விடுகின்றன.
ஒரு வாமன அவதாரமாக
இந்த உலகை அளந்தபடியே.
-துவாரகன்
www.kidukuvely.blogspot.com
- துவாரகன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-03-28