இரத்தத்தால் நிரம்பிக் கொள்ளும் மதுக்கிண்ணங்கள்
-------------------------------------------------------------------
உங்கள் உயர்ந்தரக மதுக்கிண்ணங்கள்
இரத்தால் நிரம்பியுள்ளன.
சிதைந்துபோன
குழந்தைகளின் பிஞ்சுக் கைகளிலிருந்தும்
தாய்மாரின் மார்புகளிலிருந்தும்
பிழிந்தெடுக்கப்பட்ட இரத்தத்தால்
உங்கள் மதுக்கிண்ணங்கள்
நிரம்பியுள்ளன.
ஏற்கனவே காலியான மதுக்கிண்ணங்களை
கவிழ்ந்து விடாதீர்கள்
உங்கள் சேவகர்
எப்போதும் காலியான கிண்ணங்களை நிரப்புவதற்கு
தயாராக உள்ளனர்.
முடியுமானால்
குழந்கைளின் விலா எலும்புகளில் இருந்தும்
சிசுக்களின் மூளையிலிருந்தும்
எப்படி ‘சூப்’ வைப்பதென்று
உங்கள் தலைமைச் சமையற்காரனைக் கேளுங்கள்
தாய்மாரின் மார்புகளிலிருந்தும்
பிருஷ்டங்களிலிருந்தும்
எப்படிக் கறிவைப்பது என்றும்
உங்கள் உதவியாளனைக் கேளுங்கள்.
இருபுறமும் பரிவாரங்கள் புடைசூழ
பஞ்சணைக் கதிரைகளில் இருந்து
கண்ணாடி மேசைகளில்
நிரப்பி வைக்கப்பட்டிருக்கும்
இரத்தம் நிரம்பிய மதுக்கிண்ணங்களையும்
சூப்புகளையும்
உங்கள் அயலூர் நண்பர்களோடு கொண்டாடுங்கள்.
அவர்கள்
இன்னமும் நன்றாகவே ‘சியஸ்’ சொல்லி
பானம் அருந்தும் வழி சொல்வார்கள்
காலியாகும் கிண்ணங்களை
அவ்வப்போது இடைவிடாது நிரப்பிக் கொள்ளுங்கள்
பிஞ்சுக் குழந்தைகளும்
எங்கள் தாய்மாரும்
தங்கள் தங்கள் இரத்தத்துடன்
இன்னமும்…
உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.
-சித்திராங்கன்
19012009
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-06