எல்லாம் பிடிக்கும்.. ஆயுதம் ஒன்றுதான்..
பொசுக்கிடாதே..
01.
எல்லாம் பிடிக்கும்…
---------------------------
எல்லா கட்சிகளும் பிடிக்கும்
இவர்களுக்கு-
கொடுக்கும் கூலிக்குக்
கொடிபிடிப்பவர்கள்,
கழுதைகளுக்கும்தான்-
கட்சி பேதமின்றி
போஸ்டர்
கடித்துத் தின்பதால்…!
02.
ஆயுதம் ஒன்றுதான்…
--------------------------
உளி-
கருவி ஒன்றுதான்,
அதை வைத்து-
உழைப்பவன்
வியர்வை சிந்தினால்
விளைவது
கலை,
இரத்தம் சிந்தினால்
விழுந்தது
கொலை…!
03.
பொசுக்கிடாதே…
---------------------
சின்னக் குழந்தையின்
சிரிப்பைப் பார்,
சிங்காரக் காலடி வைக்கும்
சின்ன நடையைப் பார்,
சிணுங்கல் மழலைச்
சிறப்பைப் பார்,
அதுமட்டும் வேண்டாம்-
அச்சுறுத்த வேண்டாம்..
அழுதால்
அம்புலி காட்டு,
நம்பிக்கையை
நல்லதாய்க் காட்டு…!
வளரும் குழந்தை
நெஞ்சத்தில் வஞ்சத்தையும்
அஞ்சிச்சாக அச்சத்தையும்
கொஞ்சமும் கொடுக்க வேண்டாம்..
நஞ்சாக்க வேண்டாம்
நல்ல குழந்தை மனத்தை,
கெஞ்சிக் கேட்கிறேன்-
பிஞ்சிலே பொசுக்கிடவேண்டாம்
பிள்ளைப் பயிர்களை…!
-செண்பக ஜெகதீசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-24