கடைசி கவிதை
-----------------------
நேரம்: மங்கலாகிக் கொண்டிருக்கிறது
நாள்: நாளைய இதழ்களில், பூக்களின் கசிவுடன் பிரசுரமாகும்
எந்த நாளைகளும் உறுதியல்ல...
இதில் நாளை மட்டும் என்ன?
ஆனால் உறுதியாய் இன்றைக்கு இதுதான் கடைசி கவிதை
'ஆ' - இரண்டு மாத்திரைகளில் வாயை திறந்து
'நா' - இரண்டு மாத்திரையில் மொத்தத்தையும் குவித்து
'நீர்' - இரண்டரை மாத்திரையை குடித்துவிட்டு
'கனவு' - மூன்று மாத்திரைக்குக் காத்திருக்கிறேன்
மொத்தம் எத்தனை மாத்திரைகள்? தெரியவில்லை.
மொத்தத்தில் நடுநிசித் தென்றலே...
இன்றைக்குப் பின்னிரவில்
வழக்கமாய் உன்னை வரவேற்கும் விழிகளிரண்டும்
அநேகமாய் மூடியிருக்கக்கூடும்
'பழக்கப்பட்ட விழிகள்தானே' - என்றெண்ணி
சீண்டியெழுப்பப் பார்த்து ஏமாந்துவிடாதே
நான் ஏமாற்றப் படுவதற்காகவே
பிறந்திருந்தவன்...
உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை
இதன்பின்னும் நீ ஏமாந்து திரும்பிச் சென்றால்...
நான் முதலும் கடைசியுமாய் ஏமாற்றியது உன்னைத்தான்.
-ஜதி
24-11-2005
- ஜதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-16