ஒரு கடல் நீரூற்றி
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது
வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவி வழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !
சந்தடி ஓய்ந்த தெரு வழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் !
இப்படியே
எத்தனையோ இரவுகளில்
விவாதிப்போம் நெடு நேரம்
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்
பிரிந்து செல்வோம் !
பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் !
பரணி...
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை
மாரி கால அந்திப் பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட
மீளவும் நீ வந்தாய் !
அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !
திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !
இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?
- பஹீமா ஜஹான்
2002
ஒரு கடல் நீரூற்றி...தொகுப்பிலிருந்து
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-06
தியாகங்களில் அதிசிறந்தது "உயிர் தியாகம்" இப்படியான உயிர்தியாகங்களைச் செய்யும் தியாகிகளை நாம் அன்றாடம் இப்போராட்ட சூழலில் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். கூடுதலான போராளிகளின் வெற்றுடலை சமாதிகள் ஆக்கி அவர்கள் அங்கே மண்ணோடு மண்ணாகியிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களின் சமாதிகளுக்கு மக்கள் தம் அஞ்சலிகளை காணிக்கையாக்கி வருவது சாத்தியமே. ஆனால் இக்கவிதையில் குறிப்பிட்டிருக்கும் "ஏதுமற்ற உன் கல்லறை" என்னைப் மிகவும் பாதித்துவிட்ட ஒரு வசனம்.
வெற்றிடமான ஒரு போராளியின் கல்லறை என்பது அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு விடயம் இல்லை.
அப்படியான ஒரு "ஏதுமற்ற உன் கல்லறையில் ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?" என்று இக் கவிஞர் இழப்பின் வலியுடன் கோருவது என் தொண்டைக் குழியையே அடைத்துவிட்டுச் சென்றுள்ளது.
--எதிக்கா (07.01.2008)