இத்தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...
அம்ரிதா ஏயெம் - தனது முன்னுரையில், டீன்கபூரின் கவிதைகள், கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான உணர்வுகள் வெளிப்பட்ட மனநிலையில் புனையப்பட்டவைகளாகும். இவரின் கவிதைகளில் சர்யலிச, மெஜிகல் ரியலிசப் போக்குகளை அவதானிக்க முடிகிறது. பிம்பமாற்றம், தளமின்மை, வடிவமின்மை, வெகுஜனத் தன்மை போன்றன சேரும் போது சில கவிதைகள் பின்நவீனத்துவம் நோக்கியும் பாயப்பார்க்கின்றன. அவரது இலக்கியக் கொள்கையும், அவருடைய சமூகப்பார்வையும், மனித நடத்தை நாடிய போக்குகளையும் அவருடைய கவிதைகளில் இருந்து இனங்காண முடிகிறது. நிறையக் கவிதைகளில் குத்தலான நகைச்சுவை உணர்வும் விரவிக்கிடக்கிறது. டீன்கபூரின் கவிதைகளின் இன்னொரு சிறப்பம்சம் மண் மணக்கும் சொற்களாகும். சில கவிதைகளுக்குள் இருண்மை காரணமாக முதல் வாசிப்பில் நுழைவது ஓரளவு கடினமாகவே இருக்கிறது. ஆனால் டீன்கபூர் அந்த இருண்மையைக் களைவதற்கான சிறு ஒளியையாவது கவிதைகளின் ஒரு மூலையில் வைத்திருக்கின்றார்.
டீன்கபூர் -தனது பின்னுரையில், சாலையில் உரசி செருப்பில் மண்புடைத்து நடக்கின்ற பக்குவமும் பூனையின் பதுங்கலுடன் புல்லுக்கும் நோகாமல் நடக்கின்ற பக்குவமும் மனத்தை அசுத்தப்படுத்துமா? கவிதை எல்லா வகையான கைகளிலும் நடக்கும். அவரவருக்கு ஏற்றாப்போல குதிக்கும். பானையில் பொங்கி வழிவதும் நிஜம். தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாகக் கவிதை மொழியாடல் மாட்டுகையில் யாரையும் விடுமா? வரம்புமீறிப் பாயாத நீராக இருக்கையில், மண்வெட்டியுடன் கவிதை விவசாயி எங்கிருந்தோ வருவது, அவன் பாஷைக்கு பாய்ச்சுவது எவரையும் நோகாமல் இருக்காது. கவிதை கண்களுக்குள் பாய்ந்து மனசுக்குள் மாளிகை கட்டுவது.
பருப்புக் கறிக்கும் பாணுக்குமுள்ள உறவுதான் எனக்கும் என் கவிதைகளுக்கும் உள்ள உறவு. யானைப் பொறியில் அகப்பட்ட என் கவிதைகளுக்கும் உயிரிருக்கும். ஏதாவது ஒரு வரியின் நரம்பில் அது ஓடும் என நம்புகிறேன். நாடி பிடித்துப் பார்த்தால் அதன் வேதனை புரியும். எந்த வைத்திய நிபுணர்களும் கவனம் எடுக்க வேண்டிய மூட்டுவலியும் முதுகு வலிப்பும் , தசைப்பிடிப்பும் என் கவிதைகளுக்கும் இருக்கலாம்.